சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E
Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3
2.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=AezGyWRib9k
Audio: https://www.youtube.com/watch?v=DB8qB3kmj4U
3.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருந்து மா களிற்று இள
பண் - சாதாரி   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=qxnlxhDjPz4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.083   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

[1]
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல
விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக
வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து
வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும்
வளர்கின்ற, கொச்சைவயமே.

[2]
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன்,
இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர்
சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது,
கொச்சைவயமே.

[3]
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற
சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற
பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய,
வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன
வளர்கின்ற கொச்சைவயமே.

[4]
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக்
கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்),
இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர்
தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற
கொச்சைவயமே.

[5]
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக
உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த
நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார்,
நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு
கொச்சைவயமே.

[6]
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு
உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும்
ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி
தேடு கொச்சைவயமே.

[8]
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது
உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத
சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
கொச்சைவயமே.

[9]
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு
சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து
உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று
மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு
கொச்சைவயமே.

[10]
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.089   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[1]
சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்; துன்னிய
பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[2]
பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.

[3]
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[4]
ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

[5]
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[6]
அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[8]
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[9]
குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[10]
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.089   திருந்து மா களிற்று இள  
பண் - சாதாரி   (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.

[1]
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!

[2]
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

[3]
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே
வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,
கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

[4]
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

[5]
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே,
உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!

[6]
கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்தி
கண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவு கொச்சை,
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம்
உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல், நெஞ்சே!

[7]
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து,
ஆர்த்த வாய்கள்
உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள
மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே,
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே
பேணு, நெஞ்சே!

[8]
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!

[9]
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,
இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்
நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம்
உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!

[10]
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள்
கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே
ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின்
மேலே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list